கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகேயுள்ள வரக்கால்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன்(64). இவர் கடந்த 12-ஆம் தேதி கிருத்திகை அன்று விலங்கல்பட்டு முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பைக்கில் வீடு திரும்பினார். அப்போது கடலூர் சாலையில் பில்லாலி தொட்டி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் உள்ள மரத்தடியில் பைக்குடன் மறைந்திருந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் வீரபாண்டியனின் பைக்கை பின்தொடர்ந்து சென்று, வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து வீரபாண்டியன் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுந்தரவாண்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சிலர் நடமாடுவதாக தகவலறிந்த இன்ஸ்பெக்டர் வீரமணி உள்ளிட்ட போலீசார் சுந்தரவாண்டி பேருந்து நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்த நான்கு பேரை நிறுத்தி விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்களில் இருவர் புதுச்சேரி மாநிலம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த வெள்ளிக்கண்ணு மகன் கணேஷ்(20), சின்னகுட்டியங்குப்பம் பகுதியை சேர்ந்த சித்திரவேல் மகன் மணிகண்டன்(20) என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணை செய்ததில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பைக்கில் சென்ற வீரபாண்டியனை கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துச் சென்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
அதையடுத்து கணேஷ், மணிகண்டன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 12 கிராம் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் அவருடன் பைக்கில் வந்த சிறுவர்கள் 2 பேர் குற்றச்செயல்களுக்கு தங்குமிடம் மற்றும் பைக் கொடுத்து உதவியது தெரிய வந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.