திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது. மனைவியின் நடத்தையோ சரியில்லை. அதற்காக, விவாகரத்து வரை சென்றுவிட முடியுமா? கள்ள உறவு ஒன்றும் கிரிமினல் குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது. அதனால், மனைவி இன்னொருத்தருடன் உறவுகொள்வதை சகித்துக்கொள்ள முடியுமா? குடும்ப மானம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், கள்ள உறவு என்பது பாதிக்கப்பட்டவர்களைப் பாடாய்ப்படுத்திவிடுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் – சேதுநாராயணபுரம் இரவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. கவுசல்யாவைத் திருமணம் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. கவனேஷ் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உண்டு. கடந்த ஆண்டு, அதே ஏரியாவைச் சேர்ந்த ஒருவருடன் கவுசல்யா உறவுகொண்டபோது, கருப்பையா பார்த்துவிட்டார்.
அன்றிலிருந்தே தகராறுதான். கடந்த ஒருவாரமாக, தெற்குத் தெருவில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் இருந்திருக்கிறார் கவுசல்யா. நேற்றிரவு மது அருந்திய கருப்பையா, தனக்குத் துரோகம் செய்த மனைவியைக் கொல்லத் துணிந்தார். கவுசல்யா இருந்த வீட்டுக்கே சென்று, மார்பு பகுதியில் அரிவாளால் வெட்டினார். தடுக்க வந்த உறவினர் தங்கமுடியின் கையிலும் சரமாரியாக வெட்டினார்.
வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது கவுசல்யா உயிரிழந்தார். தங்கமுடி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கருப்பையாவைக் கைதுசெய்து வத்திராயிருப்பு காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
வாழ்க்கை என்றால் என்னவென்று முழுமையாக அறியாத 18 வயது கவுசல்யா, கள்ள உறவுக்கு ஆசைப்பட்டு, கணவனால் வெட்டுப்பட்டு, உயிரை விட்டிருக்கிறாள். ஆத்திரத்தால் கொலை செய்துவிட்டுக் கம்பி எண்ணப் போகிறான் கருப்பையா. அம்மா, அப்பா என்ற நிலையிலிருந்து, தங்களின் ஒரு வயதுக் குழந்தை கவனேஷின் எதிர்காலத்தை எண்ணிப் பார்க்காததன் விளைவுதான், கள்ள உறவுக் கொலையில் முடிந்திருக்கிறது.