அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளரான, தங்கத்தமிழ்ச்செல்வன் தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார்,
தமிழகத்தின் நீட் தேர்வை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதியாக போராடி வந்தார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களான எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் மத்திய பா.ஜ.க.வின் அசைவிற்கு ஏற்றபடி நீட் தேர்வை கொண்டு வந்துவிட்டனர்.
தி.மு.க. உள்பட பல எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை வேண்டாம் என்று கூறிவந்த நிலையில் தற்போது அந்த தேர்வை நடத்த வேண்டும் என்று கூறும் அளவிற்கு அவர்கள் மனநிலையை பா.ஜ.க மாற்றிவிட்டன. நியுட்ரினோ உட்பட மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
அதுபோல் 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு விவாகரத்தை அவசர மனுவாக விசாரிக்க மனு அளித்தோம். இதுவரை அதற்கு தீர்ப்பு வரவில்லை. தற்போது எங்களது 18 எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் தொகுதி மக்களுக்கு குடிநீர், சாலை, லைட் உள்பட அடிப்படை பிரச்சனையை கூட நிறைவேற்றி தர முடியவில்லை.
அவசர வழக்கை இவ்வளவு காலம் தாழ்த்துவது வேதனையாக உள்ளது. நீதிமன்றத்தில் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். அவ்வாறு வராவிட்டால் நீதி இருக்கிறதா? என்ற சந்தேகம் ஏற்படும். ஒரு வருடமாக இந்த வழக்குக்காக நீதிமன்றத்தில் அழைந்து வருகிறோம். அப்படி இருந்தும் இன்னும் தீர்ப்பு வரவில்லை இந்த தீர்ப்பு ஒரு வேளை எங்களுக்கு பாதகமாக வந்தால் மீண்டும் நீதிமன்றத்தை நாடாமல் மக்களை சந்தித்து இடைத்தேர்தலில் போட்டி போடுவோம். அப்போது மக்கள் யாருக்கு ஆதரவாக உள்ளனர் என்று தெரிந்துவிடும் இவ்வாறு கூறினார்.