


சித்திரை பிறப்பில் தொடங்கிய கிராம கோவில் திருவிழாக்கள் தமிழகம் முழுவதும் களைகட்டி இருக்கிறது. ஒவ்வொரு கோவில் விழாவிலும் ஏதாவது ஒரு வித்தியாசம் காணப்படுகிறது. அப்படி ஒரு கோயில் மாங்காடு கிராமத்தில் உள்ளது. அய்யனார் கோயில் என்றால் குதிரை சிலைகளும் கம்பீரமான அய்யனார் சிலையும் காட்சியளிக்கும். ஆனால் இங்கே அய்யனாருக்கு சிலை இல்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு சாளுவன் தெருவில் பல நூறு ஆண்டுகளாக வனப்பகுதியில் குடிகொண்டுள்ள அய்யனார் கோவிலில் இதுவரை யாரும் அய்யனாரை கண்டதில்லை. திருப்பணி செய்து குடமுழுக்கு செய்தபோது கூட அய்யனாரை பக்தர்கள் பார்த்ததில்லை. தரை மட்டத்தை விட கீழே உள்ள ஓட்டுக் கொட்டகையில் பூசாரி ஒருவர் மட்டுமே உள்ளே சென்றுவரும் வழியோடு அமைக்கப்பட்டு அதனுள் பூசாரி நுழைந்து பூஜை செய்கிறார். அவரைத்தவிர வேறு யாரும் சாமியைப் பார்த்ததில்லை. உள்ளே என்ன உருவம் உள்ளது என்பதும் யாருக்கும் தெரியவில்லை.
இந்த கோவில் பூஜை நடந்து பல வருடம் ஆன நிலையில் தற்போது பூஜைக்கு ஏற்பாடுகள் நடந்து. அய்யனார் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களின் களிமண் சிலைகளை நெடுவாசல் மண்பாண்ட கலைஞர்கள் செய்ய, அய்யனார் கோவிலுக்கு உரிமையுள்ளவர்கள் தூக்கி வருகின்றனர். வான வேடிக்கையுடன் வாத்தியங்கள் முழங்க சாமி சிலைகளைத் தோளிலும், தலையிலும் சுமந்து வர, முன்னால் பெண்கள் வேப்பிலையுடன் ஆடிவர புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
ஓரிடத்தில் இறக்கி வைக்கப்படும் சிலைகளின் முன்னால் வரும் கோவில் பூசாரிகள் சாமியாடி வர, கை கோர்த்து வரிசையில் நின்ற பக்தர்கள் பூசாரிகளைப் பிடித்து தூக்கிச் செல்லும் நிகழ்வுகள் புதுமையாக இருந்தது. தொடர்ந்து பொங்கல் விழாவும், கிடா வெட்டு பூஜையும் நடந்தது.