சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் இன்று (27.12.2024) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்திய அளவில் சிறந்த பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. இங்குப் படிப்பதே மாணவ - மாணவிகளுக்கு ஒரு சிறப்பு ஆகும். இங்குப் படித்தவர்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனர். இங்குக் கடந்த 23ஆம் தேதி இரவு 07.45 மணியளவில் ஞானசேகரன் என்பவர் பல்கலைக்கழக வளாகத்தில் அத்துமீறி நுழைந்துள்ளார். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த மாணவன் மற்றும் மாணவியைப் பார்த்துள்ளார். அப்போது அந்த மாணவனை அடித்து உதைத்து, அங்கிருந்த மாணவியைக் கொடூரமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்திருக்கிறார். அந்த செயல்பாட்டை அவருடைய செல்போனில் ஞானசேகரன் படம்பிடித்ததாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.
அதோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஞானசேகரனுக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் ஒருவரிடம், ‘சார், சார்’ என்று பேசியுள்ளார் என மாணவி புகாரில் தெரிவித்துள்ளார். அந்த ‘சார்’ யார் என்பதை காவல்துறை இதுவரை வெளிப்படுத்தவில்லை. அந்த மாணவி இந்த விவரங்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் மாணவி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல் உயர் அதிகாரி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது ஒருவர் தான். அவர் ஞானசேகரன் தான் என்று குறிப்பிடுகிறார். அப்படியெனில் ஞானசேகரன் போனில் சார், சார் என்று பேசியது யாரிடம். இதனை காவல்துறையினர் மறைக்கின்றனர்.
இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்படி அந்த நபர் அடிக்கடி சுற்றித் திரிய முடியும். பல்கலைக்கழகத்தில் எந்த பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். அந்த மாணவிகளுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது. பெற்றோர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். அரசை நம்பி தான் பெற்றோர்கள் மாணவிகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டுள்ள 70 சிசிடிவி கேமராக்களில் 56 மட்டுமே வேலை செய்வதாகத் தெரிவிக்கின்றனர். மற்றவை ஏன் இயங்கவில்லை?. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட நபர் தங்கு தடையின்றி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடமாட முடியும். காவல்துறை ஆணையர் கூறுகையில், ’ அவசர உதவிக்கு 100க்கு புகார் வந்தவுடன் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இன்றைய தினம் அந்த துறையின் அமைச்சர் சொல்கிறார், 100க்கு புகார் வரவில்லை. காவல் நிலையத்திற்கு நேரில் வந்து தான் புகார் அளித்ததாக முரண்பட்ட தகவலைக் கூறியிருக்கிறார். எனவே உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” எனப் பேசினார்.