நடந்து போய் வாங்கும் தூரத்தில் மளிகை கடை, மெடிக்கல் என எல்லாமே இருக்கிறது. அப்படி இருக்கும்போது பைக்கில் சுற்றும் நபர்களை மறித்து பைக்கை பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவும் தன்னார்வலர்கள், காவல்நிலையத்தை அணுகி அவர்களுக்கான பார் கோடு உள்ள பாஸ்களை பெற்றுக்கொண்டு பயணிக்கலாம் என்றும், இதைத் தவிர காரணமில்லாமல் பைக்கில் வெளியே வருபவர்களை தடுத்து நிறுத்தி பைக்கை பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, இதற்காக ஒவ்வொரு போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் ஐந்து லாரிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக மதுரை போலீசாரிடையே வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை பார் கோடு உள்ள பாஸ்களை பெற மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பலர் திடீரென கூடினர். மக்கள் கூட்டத்தைப் பார்த்த அதிகாரிகள் செய்வதறியாக திகைத்தனர். இதையடுத்து வாகன அனுமதி தொடர்பாக எடுக்கப்பட முடிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, என மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆணையாளரோ பதவி உயர்வு பெற்று பொறுப்பு ஆணையராகத் தொடர்கிறார். அவர் ஏற்கனவே சென்னைக்கு பணிமாற்றம் கேட்பதாக சொல்கிறார்கள். அந்த பணிமாற்றம் கிடைக்காததால் கீழே உள்ள அதிகாரிகளை வேலை வாங்கிக்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம். இதனால் மதுரை காவல்துறை ஆணையருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் சரியான கம்யூனிகேசன் இல்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே கறிகடைகள் உள்ளிட்ட கடைகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக கலெக்டர் போட்ட உத்தரவை, கார்ப்பரேஷன் கமிஷ்னரும், போலீஸ் கமிஷ்னரும் சரியாக கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
ஐ.ஏ.எஸ். - ஐ. பி. எஸ். ஈகோ மோதலில் ஊரடங்கு காவல் பணியில் இரவு பகலாக இருக்கும் போலீசார்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும், பணியாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். போலீசாரோ, எங்க கமிஷ்னர் எங்களை நன்றாக விரட்டி விரட்டி வேலை வாங்குகிறார். மதுரையை பொறுத்தவரை கார்ப்பரேஷனும், மாவட்ட நிர்வாகமும் டோட்டல் ஜீரோ. மதுரையில் கரோனாவை கட்டுப்படுத்துவது போலீஸார்தான் என்கிறார்கள்.