தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்துள்ளார்.