மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று முதல் துவங்கியது. அரசு ஓமந்தூரார் மருத்துவமனையின் பன்நோக்கு வளாகத்தில் முதல் கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதில் மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டுப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. கலந்தாய்வில் 65 மாணவ மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அப்போது மாற்றுத்திறனாளி மாணவி ஒருவரிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அப்போது பேசிய அவர், “நான் நவதாரணி. கீழாநெல்லிக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வந்துருக்கேன். நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் நீட் முயற்சித்தேன். முதல் முயற்சியிலேயே பாஸ் ஆகிவிட்டேன். குறைந்த மதிப்பெண் தான். இருந்தாலும் மாற்றுத்திறனாளி கோட்டா என்று கூறினார்கள். எனக்கு எம்.பி.பி.எஸ் சீட் மதுரை மெடிக்கல் கல்லூரியில் கிடைத்துள்ளது.
20 நாட்கள் மட்டும் அகரம் நிறுவனத்தின் பயிற்சி பள்ளிக்கு சென்றேன். மற்ற நாட்களில் வீட்டில் இருந்து தான் படித்தேன். எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அதை எல்லாம் நான் பொருட்படுத்தியது இல்லை. நான் தேசிய அளவிலான விளையாட்டு வீராங்கனை. இறகுப் பந்து, தடகளம், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளை விளையாடுவேன். இறகுப் பந்தில் தேசிய அளவிற்கு போயுள்ளேன். இனி முழுக்க முழுக்க படிப்பில் தான் கவனம் செலுத்த உள்ளேன். எம்.பி.பி.எஸ் படித்து முடித்ததும் நரம்பியல் நிபுணர் படிப்பு படிக்க ஆசை.
சிறுவயதில் இருந்து எனது லட்சியம் மருத்துவம் படிக்கவேண்டும் என்பது. என் அப்பா, அம்மா என்னை சிறுவயதில் இருந்தே மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். அப்போ நிறைய பார்த்திருக்கிறேன். அதனால் என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்ய நினைக்கிறேன். என்னைப் போல் நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் படிக்காமல் இருப்பார்கள். பெற்றோர் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். யாரை பார்த்தும் பயப்படாதீர்கள்" எனக் கூறினார்.