மனிதநேயத்தைக் காட்டிலும் விதிமுறையைக் கடைப்பிடிப்பதே சரியானது என, அரசுத்துறை அலுவலர்களும் தேர்வு மையத்தினரும் மக்களோடு மல்லுக்கட்டிய சம்பவம் இன்று மதுரையில் நடந்தது.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு மதுரை நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தேர்வு எழுத வந்திருந்தனர். வெளியூர்களில் இருந்து வருவதால் தேர்வு எழுதும் பெண்களுக்குப் பாதுகாப்பாக அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். தேர்வு எழுதுவதற்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு அனைவரும் சென்றுவிட்ட நிலையில், விசாலமான அந்தப் பள்ளி வளாகத்தில் ஓரமாக உள்ள ஒரு மரத்தடியில் துணைக்கு வந்த ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தனர். சிலரது கையில் குழந்தைகள் இருந்தன.
அந்தப் பள்ளி பெண் நிர்வாகியின் கண்களில் மரத்தடியில் உட்கார்ந்தவர்கள் பட்டுவிட, “இங்கெல்லாம் யாரும் உட்காரக்கூடாது. எல்லாரும் வெளியே போங்க..” என்று விரட்டினார். அவரோடு சேர்ந்துகொண்டு மகளிர் காவலர் ஒருவரும் சத்தம் போட்டார். உடனே அந்த மக்கள் “என்னங்க இது? ஸ்கூலுக்கு வெளியே போனா ரோடுதான் இருக்கு. அடிக்கிற வெயில்ல இந்தக் குழந்தைங்களை வச்சிக்கிட்டு தூசி பறக்கிற ரோட்டுல ரெண்டு மணி நேரம் எப்படிங்க நிற்கமுடியும்? இதுக்கு முன்னால.. எங்க பிள்ளைங்களோட எத்தனையோ சென்டர்களுக்கு நாங்க போயிருக்கோம். அங்கே காட்டாத கெடுபிடி இங்கே மட்டும் ஏன்?” என்று கேட்க, அந்தப் பெண் நிர்வாகி “எங்க ஸ்கூல் அப்படித்தான்..” என்று பேச்சில் வேகத்தைக் கூட்டினார்.
“பள்ளி நிர்வாகம் சம்மதிக்காதபோது, இந்த வளாகத்தில் இருப்பதற்கு உங்களை அனுமதிக்க முடியாது. பிரச்சனை செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்” என்று தன் செல்போனில் அந்தப் பெண் காவலர் அங்கிருந்த மக்களை வீடியோ எடுத்தார். தேர்வு நடத்திய அரசு அலுவலர்களும் “வெளியே போங்க..” என்று விரட்டினார்கள். விரட்டப்பட்டவர்களில் ஒருவர், எழுத்துத்தேர்வு நடத்திய அனுபவம் உள்ள ஒருவரைத் தொடர்புகொண்டு, “இப்படி விரட்டுகிறார்களே? எழுத்துத் தேர்வை நடத்திடும் மையங்களுக்கு இத்தனை கடுமையான விதிமுறைகள் உள்ளனவா?” என்று கேட்க, அந்த அரசு அலுவலர் “குறிப்பிட்ட சில எழுத்துத் தேர்வுகளின்போது தேர்வு எழுதுபவர்களுக்கு வெளியில் இருந்து யாரும் உதவி செய்துவிடக்கூடாதென்ற நோக்கத்தோடு இப்படி நடந்துகொள்வார்கள். அதுவும்கூட, தேர்வு எழுதும் அறைக்குள் வெளிநபர்கள் யாரும் சென்றுவிடக்கூடாதென்ற காரணத்துக்காகத்தான். இந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டருக்கான எழுத்துத் தேர்வில் மக்களிடம் இத்தனை ஆத்திரமாக நடந்துகொள்ள வேண்டியதில்லை. தேர்வு எழுதும் இடத்திலிருந்து சற்று இடைவெளியில் உள்ள ஒரு பகுதியை ஒதுக்கி வந்திருந்தவர்கள் உட்காருவதற்கு வசதி செய்து கொடுக்கலாமே?” என்றார்.
அவர் அப்படிச் சொன்னதும் அந்த மக்கள் “எங்கள் வெளியேற்ற வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? விதிமுறைகள் இருக்கின்றனவா? எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்?” என்று கேள்வி கேட்க, கூடுதலாகக் காக்கிகள் வரவழைக்கப்பட்டு, அத்தனை பேரையும் வெளியெற்றினார்கள். சுள்ளென்ற வெயிலில் ரோட்டுக்கு விரட்டப்பட்ட மக்கள், அந்தப் பள்ளியின் கேட் அருகே நின்று, அராஜகத்துக்கு எதிராகக் கோஷமிட்டார்கள். நிலைமை மோசமாவதைக் கண்ட அந்தப் பள்ளி நிர்வாகியும் காக்கிகளும் “சரிங்க.. இங்கே நிழலில் ஒரு ஓரமா உட்கார்ந்துட்டுப் போங்க.. தேவையில்லாம பிரச்சனை பண்ணாதீங்க..” என்று எரிச்சலோடு அனுமதித்தனர்.
“இதை முதலிலேயே செய்திருக்கலாமே? ஒரு பள்ளியை நடத்துபவர்களுக்கு மனிதநேயம் துளிகூட இல்லாமல் போய்விட்டதே?” என்று முனகியபடியே வெறும் தரையில் அமர்ந்தார்கள் மக்கள். அவர்களில் முதியவர் ஒருவர், “பிரிட்டிஷ்காரனும்தான் சட்டம் போட்டான். அந்தச் சட்டம் இந்தியர்களுக்கு எதிரானது என்பதை அறிந்துதானே விடுதலைப் போராட்டத்தைக் கையில் எடுத்தோம். எந்தச் சட்டமும் மக்களுக்கானதுதான். இது தெரியாமல் நடந்துகொள்பவர்களை என்னவென்று சொல்வது? என்றார் குமுறலுடன்.
மக்களை விரட்டியடித்த இடத்தில் அந்தப் பள்ளியில் எழுதப்பட்டிருந்த ஞானநூல் வசனம் இது –நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது.
நிழலில் அமர்வதற்குக்கூட போராட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பது கொடுமைதான்!