Skip to main content

''நான் செய்த எல்லா பணிகளுக்கும் ஆவணங்கள் வைத்திருக்கிறேன்'' - நத்தர்ஷா பள்ளிவாசல் அறங்காவலர் அல்லாபக்‌ஷ்

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

 "I have documents for all the work I have done" - Natarsha Masjid Trustee Allah Baksh

 

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் தலைமை அறங்காவலர் அல்லாபக்‌ஷ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சுழற்சி முறையில் மற்றொருவரை பொது அறங்காவலராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

கடந்த 6 ஆம் தேதி அன்று வக்பு வாரியத்தின் திருச்சி மண்டலத்திலிருந்து ஒரு கடிதம் பள்ளிவாசலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய நிர்வாக அறங்காவலர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், வக்பு வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் வெளியிட்ட குறிப்பாணை அடிப்படையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பாளர் கடிதம் அனுப்பி இருந்தார்.

 

வக்பு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக ரபியுல்லா கடந்த 30 ஆம் தேதியோடு பதவியில் இருந்து விலகிவிட்டார். புதிய தலைமை செயல் அதிகாரியாக அரசு கேபிள் நிறுவனத்தில் பணியாற்றிய ஜெய்னுலாப்தீன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு கடந்த மார்ச் 30 ஆம் தேதி இந்த ஆணையை வழங்கினாலும் கூட கடந்த 10 ஆம் தேதி தான் ஜெய்னுலாப்தீன் பதவியில் வந்து சேர்ந்துள்ளார். கடந்த 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை வக்பு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி பதவி காலியாக இருந்தது. பொறுப்பு அதிகாரியாக யாரும் நியமிக்கப்படாத நிலையில் இந்த கடிதத்தை யார் அனுப்பியது? யார் சொல்லி அனுப்பியது? எனக் கேள்வி எழுந்தது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விவகாரம் குறித்து நத்தர்ஷா பள்ளிவாசல் அல்லாபக்‌ஷிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, ''நான் கடந்த 6 ஆம் தேதி அறங்காவலர்கள் கூட்டம் நடத்த உள்ளதாக அறங்காவலர்களுக்கும், வக்பு வாரியத்துக்கும் கடிதம் அனுப்பி வைத்தேன். அங்கிருந்து மீண்டும் பதில் கடிதம் மூலம் தொடர்ந்து தலைமை அறங்காவலராக இருப்பதற்கு வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. பொதுவாக பொது அறங்காவலர்கள் 3 பேர், கௌரவ பதவியான பங்காளி, பரம்பரை அறங்காவலர்கள் தலா ஒருவர் வீதம் என மொத்தம் 2 பேர் இருப்பார்கள். இந்த 5 பேரில் பொது அறங்காவலர்கள் 3 பேரில் ஒருவர் தலைமை அறங்காவலராக நியமிக்கப்படுவார்கள்.

 

தற்போது பங்காளி, பரம்பரை அறங்காவலர்கள் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இந்த இருவரையும் நியமிக்க வேண்டியது வக்பு வாரியம் தான். எனவே அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு தலைமை அறங்காவலராக தொடருவதற்கான கூட்டத்தை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதான் நீதிமன்ற உத்தரவும் கூட. இந்த 5 பேரில் யாரும் பதவியில் இல்லாமல் புதிய நிர்வாகி அந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் வரை தலைமை அறங்காவலர் பதவியில் நீடிப்பார். அவரும் 3 வருடங்கள் மட்டுமே நீடிக்க முடியும். அதேபோல் வங்கிக் கணக்கில் 63 லட்சம் இருந்ததாக கூறுகிறார்கள். நான் செய்த எல்லா பணிகளுக்கும் உரிய ஆவணங்கள், ஆடிட்டிங் என அனைத்தும் சரியாக வைத்து வக்பு வாரியத்துக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

 

அதேபோல் வக்பு வாரியத்தில் இருந்து கடிதம் சிஇஓ இல்லாமல் எப்படி வந்தது என்று கேட்டுள்ளனர். அவர்களுக்கு அதற்கான வரைமுறை தெரியவில்லை. ஒருவர் இல்லாத பட்சத்தில் அவருக்கு கீழ் உள்ள பொறுப்பு அதிகாரி நான் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார். எனவே, அவர்கள் சொல்லும் எந்த குற்றச்சாட்டுக்கும் அவர்களிடம் உரிய ஆதாரம் இல்லை. எனவே, ஆதாரம் இல்லாமல் பேசும் அவர்களுடைய வார்த்தைகளை நான் கேட்பதாகவும் இல்லை. நான் இந்த பள்ளிவாசலுக்கு வந்த பிறகு பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் இந்த பள்ளிவாசலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவேன்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்