திருவள்ளூர் மாவட்டம் ஆவடியைச் சேர்ந்த 9 வயது சிறுமி தான்யா முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். தமிழக முதல்வரிடம், தான் படிக்கும் பள்ளியில் உடன் பயிலும் மாணவர்கள் யாரும் என்னுடன் பேசுவதில்லை என்றும் சிகிச்சை அளித்து என் முகத்தை சரி செய்ய உதவி செய்யுங்கள் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
பின் பூந்தமல்லி அருகே உள்ள தண்டலம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான்யாவுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி தொடர்ந்து 8 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின் முதலமைச்சர் சிறுமியை நேரில் சந்தித்தும் நலம் விசாரித்தார். செப்டம்பரில் சிறுமி வீடு திரும்பினார். பின் ஜனவரி 5 ஆம் தேதி அதே மருத்துவமனையில் சிறுமிக்கு 11 மருத்துவர்கள் கொண்ட குழுவினரால் இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தச் சிகிச்சை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்த சிறுமி வீடு திரும்பினார். தொடர்ந்து அவர் இல்லம் தேடிக் கல்வி முறையில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது அவர் தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பிற்காக சேர்க்கப்பட்டுள்ளார். 5 ஆம் வகுப்பிற்கான கல்விக் கட்டணத்தை எம்.எல்.ஏ சுதர்சனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிறுமி தான்யா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இது குறித்து வீடியோ வெளியிட்டிருந்த சிறுமி தான்யா, அதில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்திருந்தார். தொடர்ந்து செய்தி ஊடகங்கள், மருத்துவர்கள் தனக்காக வேண்டிக்கொண்ட அத்துனை பேருக்கும் நன்றி தெரிவித்துள்ள சிறுமி தான்யா, ஐ லவ் யூ ஸ்டாலின் அங்கிள் என்று கூறி முதலமைச்சருக்கு தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். சிறுமி நன்றி தெரிவித்துள்ள செய்தியைத் தனது ட்விடர் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லவ் யூ தான்யா எனப் பதிவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.