கரோனா நோய் தாக்கம் காரணமாக பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு தரப்பிலும், மருத்துவர்கள் தரப்பிலும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. அதேபோல் கரோனாவை எதிர்க்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி எனவும் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், சென்னையில் பெண் ஒருவர் மயக்க மருந்து தடவிய மாஸ்க் தந்து நகைகளைத் திருட முயன்றது தொடர்பான புகார் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேட்டைச் சேர்ந்த திவ்யா பாரிமுனை கந்தக்கோட்டத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் முகக் கவசம் அணியாமல் பயணித்துள்ளார். அப்போது ஷேர் ஆட்டோவில் கைக்குழந்தையுடன் ஏறிய பெண் ஒருவர் சமூக நலன் கருதி மாஸ்க் தருவதுபோல மயக்க மருந்து தடவிய மாஸ்க்கை கொடுத்துள்ளார். அதைப் பெற்றுக்கொண்ட திவ்யா மாஸ்க்கை அணிந்தவுடன் மயக்க நிலைக்குச் சென்றுள்ளார்.
மயக்க நிலையில் சாந்தோம்வரை ஷேர் ஆட்டோவில் சென்ற திவ்யா, மயக்கம் தெளிந்தவுடன் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் மயக்கமான நிலையில் அந்தப் பெண் நகைகளைத் திருட முயன்றதாக திவ்யா குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வினோத புகார் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.