
திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சரஸ்வதி(50), வெங்கட்ராமன்(55). தம்பதியான இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதின் காரணமாக கடந்த 1 வருட காலமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உறவினர்கள் கூடி பேசி இருவரையும் சமாதானம் செய்து வைத்து சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இருப்பினும் வெங்கட்ராமன் குடித்துவிட்டு தொடர்ந்து சரஸ்வதியிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நிலத்திற்கு மின்இணைப்பு வழங்க வேண்டும் என்று கூறி மனைவியிடம் வெங்கட்ராமன் பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் கோபமடைந்த வெங்கட்ராமன் அரிவாள் எடுத்து அவர் மனைவி சரஸ்வதி கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அதனைத் தொடர்ந்து வெங்கட்ராமனும், மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தாத்தையங்கார்பேட்டை காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சரஸ்வதி, வெங்கட்ராமனின் மகன் பிரசாந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.