
பத்தாம் வகுப்பு (SSLC) மற்றும் மேல்நிலை முதலாமாண்டுக்கான (+1) பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்தன. அதே சமயம் இந்த பொதுத் தேர்வை எழுதிய அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இத்தகைய சூழலில் தான் இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று (16.05.2025) வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 2024 - 2025ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (SSLC) மற்றும் மேல்நிலை முதலாமாண்டுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்ககத்தில் இன்று (16.05.2025 - வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணிக்கு வெளியிடப்படப்படவுள்ளது. எனவே பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை இன்று காலை 9.00 மணிக்கு https/resultsdigilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.
அதே போன்று மேல்நிலை முதலாமாண்டு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை இன்று பிற்பகல் 2.00 மணிக்கு https//resultsdigilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வர்கள் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதோடு, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.