கொத்தமங்கலத்தில் வடைக்காகக் காத்திருந்த ஒரு காகம் மின்கம்பத்தில் உள்ள மின் ஒயர்களுக்குள் சிக்கி ஆபத்தில் தவிப்பதைப் பார்த்து அந்த காகத்தை மீட்க நூற்றுக்கணக்கான காகங்கள் ஒன்று கூடி கூக்குரல் எழுப்பிக் காப்பாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் வாடிமாநகர் கடைவீதியில் காலை 6 மணிக்கு அங்குக் கூடும் காகங்களுக்குத் தினசரி வடைகள் வாங்கிக் கொடுப்பதைப் பல வருடங்களாகத் தொடர்கிறார் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் ஒருவர். ஒரு நாளைக்கு மின்வாரிய ஊழியர் வரவில்லை என்றாலும் கூட அவரது கணக்கில் காகங்களுக்கு வடைகள் வைக்கும் நிகழ்வு தடையின்றி நடக்கும். தினசரி டீ கடையில் வடைகளை வாங்கி சின்ன சின்ன துண்டுகளாகப் பிரித்து வைப்பதற்கு ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் தான், சில நாட்களுக்கு முன்பு வடைக்காக ஏராளமான காகங்கள் அப்பகுதியில் உள்ள மரங்கள், மின் கம்பங்கள், மின்கம்பிகளில் அமர்ந்திருந்தன. அதில் ஒரு காகம் அப்பகுதியில் உள்ள ஏராளமான கடைகளுக்கு மின் இணைப்புகள் செல்லும் அதிகமான ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்த மின் கம்பத்தில் அமரும்போது மின் ஒயர்களுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்து அபயக்குரல் எழுப்பியது.
ஒரு காகம் ஒயர்களுக்குள் ஆபத்தில் சிக்கியுள்ளதைப் பார்த்த நூற்றுக்கணக்கான காகங்கள் அந்தக் காகத்தைக் காப்பாற்ற அதிக சத்தத்துடன் கூக்குரல் எழுப்பிக் கொண்டே அங்குமிங்குமாகப் பறந்தது. தன்னைக் காப்பாற்ற தன் இனமே ஒன்று கூடியுள்ளதை உணர்ந்த ஆபத்தில் சிக்கியிருந்த காகம் சுமார் 30 விநாடிகளுக்குள் ஒயர்களுக்குள்ளிருந்து வெளியேறியது. ஆபத்தில் சிக்கிய காகம் உயிருடன் மீண்டதைப் பார்த்த மற்ற காகங்கள் சத்தம் எழுப்புவதை நிறுத்திக்கொண்டது. காத்திருந்த காகங்கள் வழக்கமாக வைக்கப்படும் வடைகளைச் சாப்பிட்டுப் பறந்து சென்றது. இந்தச் சம்பவத்தை அப்பகுதியில் நின்றவர்கள் பார்த்து நெகிழ்ந்து போனார்கள்.