Skip to main content

உயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்!!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
incident kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் வசித்து வந்தார், காவலர் கோபி. இவர் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணி செய்து வந்துள்ளார். கடந்த 26.5.2020 அன்று மாலை பணிமுடிந்து தியாகதுருகத்தில் உள்ள தனது வீட்டுக்கு டூவீலரில் திரும்பி கொண்டிருந்தார். தியாகதுருகம் பைபாஸ் சாலை அருகே வரும் போது விபத்துக்குள்ளாகி கோபி உயிரிழந்து விட்டார்.

 

இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், 12 வயதில் ஹரிஹரன் என்ற மகன், நேத்ரா என்ற 10 வயது மகளும், வயதான தாய், தந்தை என கூட்டுக்குடும்பமாக உள்ளனர். இவர்களின் குடும்ப சூழ்நிலையை பார்த்த சக காவலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட உதவும் கரங்கள் என்ற குழுவை உருவாக்கி வாட்ஸ் அப்பில் மூலம் 2003 (பேட்ச்)ஆண்டில் பணிக்கு சேர்ந்த தமிழகத்தில் உள்ள காவலர்களுக்கு 5043 என்ற எண்ணை துவக்கி அதன் மூலம் கோபி குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு கேட்டிருந்தனர்.

 

காவலர்களின்  வேண்டுகோளுக்கிணங்கி காவல் துறையைச் சேர்ந்த பலர் நிதி உதவி அளித்துள்ளனர். அப்படி அவர்கள் அளித்த நிதி 25,21,500 ரூபாய் பணத்தை மறைந்த காவலர் கோபியின் நண்பர்களான சக காவலர்கள் இணைந்து நேற்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அந்த பணத்தில் கோபி மகன் ஹரிஹரன் பேரில் சுமார் 9 லட்சம் ரூபாய்க்கு எல்.ஐ.சி பாலிசியும், கோபி மகள் நேத்ரா பெயரில் 10 லட்ச ரூபாய் பாலிசியும், கோபியின் தாய் தந்தை இருவருக்கும் இரண்டரை லட்ச ரூபாய் அவர்களின் அந்திமகால செலவினங்களுக்கும். கோபியின் மனைவி காஞ்சனாவிற்கு 2,60,000 ரூபாய் அவரது குடும்ப செலவிற்கும். இதுயில்லாமல் 3000 ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு பாலிசியையும் எடுத்து இதற்கான ஆவணங்களையும், பணத்தையும் அவர்கள் கையில் கொடுத்தனர்.

 

இப்படி தனது கணவர் இறந்தும் அவரது சகோதரர்கள் போல உதவி செய்தசக காவலர்கள் செய்த உதவியை கண்டு அவரது மனைவி காஞ்சனாவும், தனது பிள்ளை இறந்தும் தங்கள் பிள்ளைகள் போல தங்களுக்கு உதவி செய்த காவலர்களை பார்த்து கோபியின் பெற்றோர்களும் கலங்கிய கண்களுடன் நன்றி தெரிவித்து கொண்டனர். இந்த காட்சி அங்கிருந்தவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

 

கோபி குடும்பத்திற்கு தமிழக அளவில் பல்வேறு காவலர்கள் உதவி செய்துள்ள சக காவலர்களுக்கு அந்த குடும்பத்தினரும் கோபியின் சககாவல்  நண்பர்களும் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துள்ளனர். இதேபோன்று சக காவலர்கள் குடும்பம் கஷ்டப்படும்போது அவர்களுக்கு நாங்கள் உதவும் கரங்களாக இருப்போம் என்கிறார்கள் 2003 பேட்ஜை சேர்ந்த காவலர்கள். கணவரை இழந்து தவித்த அந்த குடும்பத்தினருக்கு இந்த மிகப்பெரிய உதவி என்கிறார்கள் மறைந்த காவலர் கோபியின் உறவினர்கள் காவலர்கள் மத்தியில்  ஏற்பட்டுள்ள இந்த மனித நேய உதவி பலரையும்  மனம் நெகிழ வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்