ஒவ்வொரு நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களிலும் தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அந்த வாக்குறுதிகள் நிறைவேறுவதற்குள் அடுத்த தேர்தலை மக்கள் சந்தித்துவிடுகின்றனர். கட்சிகளும் தங்களது புதிய வாக்குறுதிகளை அளிக்கும். அதன்படி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 கோடி இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்தார். அது தோல்வியடைந்ததை சமீபகாலமாக ராகுல் காந்தியும் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டி வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவிலும் படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கிறது. எங்காவது ஒரு வேலை இருந்தாலும் அந்த இடத்திற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அதனால்தான் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி அமைப்பாளர், அலுவக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்குக் கூட ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதினால், தமிழே தெரியாத வெளிமாநிலத்தவர்கள் வேலையைப் பறித்துக்கொண்டு போவதற்கு ஏற்றவாறு தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்து தமிழக இளைஞர்களை வஞ்சிக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம் பல இளைஞர்களைத் தவறான வழிக்கும் இழுத்துச் செல்கிறது. ஆனால் தினம்தினம் செய்தித்தாள்கள் முதல் தொலைக்காட்சி வரை 'வெற்றி நடைபோடும் தமிழகமே' வாசகங்கள் விளம்பரங்களாக வெளிவந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு நேற்று (14.02.2021) மாலை ஒரு இளைஞருக்காக வைத்தப் பதாகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதாகையில் "புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெற்றிகரமாக 24ஆம் ஆண்டு பதிவு மூப்பை புதுப்பித்த எங்கள் இனிய நண்பர் கே.ஆனந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்." என்று பதாகையில் பதிவு எண் மற்றும் செல் நம்பர் வரை பதிவிட்டு, இறுதியில் வேலை இல்லா இளைஞர்கள் வைத்ததாக உள்ளது.
இதுகுறித்து வெற்றிகரமாக 24ம் ஆண்டு பதிவு மூப்பை புதுப்பித்த புதுக்கோட்டை அசோக்நகர் கே.ஆனந்தராஜ் நம்மிடம் கூறியதாவது: “நான் முதன்முதலில் 1997 ம் ஆண்டு, 10 வகுப்பு முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். தொடர்ந்து +2 முடித்து பதிவு செய்தேன், 2010 ல் ஆசிரியர் பயிற்சி முடித்து பதிவு செய்தேன், 2013 ல் ஓட்டுநர் உரிமம் மற்றும் 2018 ல் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பதிவு செய்திருக்கிறேன். தொடர்ந்து பதிவை புதுப்பித்துக்கொண்டிருக்கிறேன். கடந்த மாதம் புதுப்பிச்சாச்சு. இப்படி 24 வருடமாக வேலைவாய்ப்பிற்கான பதிவைப் புதுப்பித்து வைத்திருக்கிறேன். ஆனால் ஒரு வேலைக்குக் கூட அழைப்பு வரவில்லை. இப்போது ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த ஓட்டுநராக வேலை செய்து வருகிறேன். இதைப் பார்த்த என்னைப் போன்ற வேலையில்லா இளைஞர்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு எனக்காக வாழ்த்துப் பதாகை வைத்துள்ளனர். நேற்று மாலை பதாகை வைத்தார்கள், இன்று காலை அந்தப் பதாகையைக் காணவில்லை,” என்றார்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக அமைச்சர்கள் பெரும்பாலானோர் கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதியில் போட்டியிட திட்டம் வைத்திருப்பதாக சொல்ல படுகிறது. இந்தநிலையில், சுகாதரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரின் மாவட்டமான புதுக்கோட்டையில் இந்தப் பேனரால் பரபரப்பு நிலவி வருகிறது. அதேபோல் மாலை வைத்த பேனர், காலை காணவில்லை என்றால் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள்தான் அகற்றிருப்பார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.