திண்டுக்கல் அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கியதாக கூறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் குதித்தனர்.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் அருகே ஹோட்டல் உரிமையாளரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தாக்கியதாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு அகரம் பிரிவில் ஹோட்டல் நடத்தி வருபவர் ஜோசப். நேற்று மதியம் இவர் தனது ஓட்டல் முன்பு அமர்ந்து நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட தாடிக்கொம்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர், ஜோசப்பை அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் அவரை சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தரக்குறைவாக பேசியதுடன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஜோசப்பை தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று எச்சரித்து அனுப்பி இருக்கிறார். இதற்கிடையே சப் இன்ஸ்பெக்டர் சேகர் தாக்கியதால் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜோசப் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவர் தனது உறவினர்களிடம் நடந்த விஷயத்தைத் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஜோசப்பை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அகரம் கருங்கல்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் போலீஸ் துணை சூப்ரண்ட் வினோத், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. அதைத் தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் ஜோசப் மற்றும் அவருடைய உறவினர்கள் சிலர் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சப்- இன்ஸ்பெக்டர் சேகர் மீது ஜோசப் புகார் அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உறுதியளித்ததைத் தொடர்ந்து அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். இச்சம்பவம் தாடிக்கொம்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.