கரூரில் சேர மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட, தொன்மையான, மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்று, 'கல்யாண பசுபதீசுவரர்' கோயில். இங்குதான் ஈஸ்வரன் இரு மனைவிகளோடு காட்சியளிக்கிறார். அருள்மிகு அலங்காரவல்லி, சௌந்தரநாயகி அம்மன் உடன் கல்யாண பசுபதீசுவரர் உள்ளார்.
இக்கோவிலின் தலவரலாற்றுப்படி, வேட்டுவர் குலப் பெண் சௌந்தரநாயகி, இந்த அம்மனின் பக்தி வரலாற்று ஓவியப் புகைப்படங்கள், கோவில் தொடங்கிய காலத்திலிருந்து இருந்ததாகவும், தற்போது இக்கோயில் புரணமைப்புச் செய்யப்பட்டு அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெறவும் உள்ளது.
இந்த நிலையில், அம்மன் செளந்தரநாயகி பற்றிய ஓவியம் மற்றும் அவரை பற்றிய வரலாறுகளை இந்து சமய அறநிலையத் துறை அப்புறப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைக் கண்டித்தும், மீண்டும் அந்த ஓவியப் புகைப்படங்களையும் மற்றும் தலவரலாறு சம்பந்தமான அனைத்து ஓவியப் புகைப்படங்களையும், அதே இடங்களில் வைத்திட வேண்டி, கரூர் மாவட்ட ஆட்சியரிடமும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியிடமும் அனைத்து வேட்டுவ கவுண்டர்கள் சமுதாயம் சார்பாக மாரிலத் தலைவர் முனுசாமி தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.