Skip to main content

விசாரணை கைதி சந்தேக மரணம்- வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்! 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

prisoner incident kondugaiyur police station cbcid investigation

 

கொடுங்கையூர் காவல்நிலைய விசாரணை கைதி உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நள்ளிரவு வரை விசாரணை நடத்திய காவல்துறை உயரதிகாரிகள் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். 

 

சென்னை கொடுங்கையூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திருவள்ளூர் மாவட்டம், அலமாதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, செங்குன்றத்தில் உள்ள கூட்டாளியிடம் நகைகள் இருப்பதாக கூறியதாகவும், அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்றும் நகைகளை மீட்க முடியவில்லை என்று தெரிகிறது. 

 

இந்த நிலையில், ராஜசேகரை கொடுங்கையூர் புற காவல் நிலையத்தில் வைத்து காலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, திடீரென உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைப் பெற செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த மருத்துவமனை அறிவுறுத்தலின் பேரில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ராஜசேகர் உயிரிழந்துவிட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். 

 

உயிரிழந்த ராஜசேகர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றன. 

 

விசாரணை கைது மரணமடைந்ததையறிந்த சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஷ்வரி, புளியந்தோப்பு இணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். 

 

ராஜசேகரிடம் விசாரணை நடத்திய காவலர்கள் யார் யார்? எங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது? என்பது குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெய் சேகர், மணிவண்ணன், காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வடக்கு மண்டல காவல் கூடுதல் ஆணையர் அன்பு, "ஒன்றிரண்டு சம்பவத்தை வைத்து காவல்துறைக்கு வேறொரு கலரில் பெயிண்ட் அடிப்பது சரியில்லை. தொடர்ச்சியாக மரணம் நடக்கிறது எனச் சொல்ல முடியாது. புலன் விசாரணை நடத்துவது காவல்துறை கடமை. விசாரணையின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மதியம் 01.00 மணிக்கு ராஜசேகருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், மாலை 04.00 மணிக்கு விசாரணை கைதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது விசாரணை கைது ராஜசேகர் இறந்துவிட்டார்" எனத் தெரிவித்தார். 

 

இந்த நிலையில், ராஜசேகரின் சந்தேக மரணம் தொடர்பான வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதோடு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்