Skip to main content

நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வை தள்ளிவைக்கும்படி தேர்வாணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

High Court orders postponement of interview

 

தமிழ்நாட்டில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு வரும் 19ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வைத் தள்ளிவைக்கும்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதற்கான தேர்வில் 1,328 பேர் கலந்துகொண்ட நிலையில், 33 பேரை மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 33 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, எழுத்து தேர்வில் பங்கேற்ற 1,328 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து, தகுதியானவர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைக்க உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில், 226 பேரை ஜூலை 19ஆம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. 

 

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் சிலர், உரிய தகுதியைப் பெறவில்லை எனக் கூறி, விண்ணப்பதாரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், தேர்வு நடைமுறைகளில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கருதுவதால், இந்த தேர்வு நடைமுறைகளில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனக் கூறி, ஜூலை 19ஆம் தேதி நடைபெற இருந்த நேர்முகத் தேர்வைத் தள்ளிவைக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கு முடியும்வரை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு நடத்தக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 19ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.