Skip to main content

கேசவ விநாயகத்துக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
High Court barrage of questions for Kesava Vinayakam

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கும் அளிக்கும்படி பாஜகவின் தமிழக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். 

High Court barrage of questions for Kesava Vinayakam

இத்தகைய சூழலில் சிபிசிஐடி போலீசார் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கேசவ விநாயகம் மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கேசவ விநாயகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (03.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், “எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், சட்டவிரோதமான வழக்கு என எப்படிக் கூற முடியும். சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினால் அதன்படி ஆஜராக வேண்டுமே தவிர அதனைத் தவிர்த்து சட்டவிரோதம் எனக் கூறமுடியாது. எனவே சிபிசிஐடி போலீசாரிடம் கேசவ விநாயகம் ஆஜராக வேண்டும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்