







மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கில் 3 பேரையும் ஆஜர்படுத்த மதுரையில் இருந்து காவல்துறையினர் அவர்களை அழைத்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் 3 பேரும் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோதும், நீதிமன்றத்தில் இருந்து காவல்துறை வேனுக்கு அழைத்துச் சென்றபோதும், நிர்மலா தேவியை நெருங்க விடாமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பத்திரிகையாளர்கள் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தனர். அப்போது அவர் எதுவும் பேசாமலும், பத்திரிகையாளர்கள் பக்கம் திரும்பாமலும் சென்றார்.
பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதை பார்த்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர், ஏம்மா உனக்கு பேச வராதா என்றார்.
அவரை நெருங்கி நீங்க யார் என்றபோது, முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பவுன்சாமி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், ''என்னங்க பின்ன, நீங்களெல்லாம் பதில் சொல்லுங்க சொல்லுங்கன்னு கேட்டுக்கிட்டே போறீங்க, அந்தம்மா எதுவும் பேசாமலேயே போகுது. அதான் உனக்கு பேச வராதா என கேட்டேன். இப்பத்தாங்க தெரியுது. இந்த விவகாரத்துல ஏதோ இருக்குது. அது என்னென்னு தெரியல'' என்றார்.
படங்கள்: அண்ணல், ராம்குமார்