Skip to main content

சென்னையில் கனமழை தொடரும்! 

Published on 30/11/2024 | Edited on 30/11/2024
Heavy rain will continue in Chennai

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் வேகம் அதிகரித்துள்ளது. முன்னதாக மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதே சமயம் ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகலில் புயல் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது இன்று மாலையில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி மாமல்லபுரம் - காரைக்கால் இடையே இன்று மாலை ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மற்றொரு வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “இன்று (30.11.2024) மதியம் 1 மணிக்குள் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களிலும், வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் இடி மற்றும் மின்னலுடன்  கூடிய கனமழை பெய்யும்.

கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்