சென்னை, கலைவாணர் அரங்கத்தில் விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (29.12.2024) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தோழர் இரா. நல்லகண்ணு 100, நூறு கவிஞர்கள் நூறு கவிதைகள்" என்ற நூலினை வெளியிட்டார். அதன் பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “வாழ்த்துவதற்காக வரவில்லை. வாழ்த்து பெறுவதற்காக வந்திருக்கிறோம். சமத்துவ சமூகத்தை அமைக்கும் பணியில் வெல்வதற்கு ஐயா வாழ்த்துகள் வேண்டும் என்று கேட்டு வந்திருக்கிறோம். பெரியார் கலைஞருக்குக் கிடைக்காத வாய்ப்பு ஐயாவிற்குக் கிடைத்திருக்கிறது. கம்பீரமான செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணா, கலைஞர், இந்திரா காந்தி என பல்வேறு தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் பழ. நெடுமாறன். இந்த விழா பொதுவுடைமை, திராவிடம், தேசியம் ஆகியவற்றின் சங்கமமாக நடைபெறுகிறது . எல்லோரையும் ஒன்றிணைத்தது ஐயா நல்லாகண்ணுவின் உழைப்பு. வயதால் எனக்குத் தம்பி. அனுபவத்தால் எனக்கு அண்ணன் என்று நல்லகண்ணுவை கலைஞர் புகழ்ந்துரைத்தார். ஒரு கண் முகத்தில் இருக்கிறது; இன்னொரு கண் அகத்தில் இருக்கிறது அவர் நல்லகண்ணு என்று கலைஞர் கூறினார். நல்லகண்ணு காலத்தில் நாம் வாழ்வது நமக்குப் பெருமை. கொள்கை உணர்வுடன் வாழ்த்தவும் வாழ்த்து பெறவும் வந்திருக்கிறேன். பெரியார் விருது ஒரு இலட்சம் கொடுத்தோம் அதில் 50 ஆயிரத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்கும், 50 விவசாயச் சங்கத்துக்கும் கொடுத்தார்.
தகைசால் தமிழருக்குக் கொடுத்த 10 லட்சத்தில் இன்னும் 10 ஆயிரத்தைச் சேர்த்து தமிழக அரசுக்கே கொடுத்தார். கட்சிக்காகவே உழைத்தார். உழைப்பால் கிடைத்த பணத்தை எல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார். அதனால் தான் உயர்ந்து நிற்கிறார். தாமிரபரணி காக்க அவர் போராடினார். சமூகத்தைக் காப்பதே அவருக்கு பணி எனச் சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. ஒரு இயக்கமும் அதன் மூத்த தலைவரும் நூற்றாண்டு விழா கொண்டாடுகின்றனர். மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுதிய தேர்தல் அறிக்கையை மொழி பெயர்த்து எழுதியவர் பெரியார். திராவிட கட்சியில் இல்லையென்றால் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று கூறினார் கலைஞர். இவ்வளவு பேசும் என் பெயர் கூட ஸ்டாலின் தான். இரு இயக்கங்களுக்குமான நட்பு கொள்கை நட்பு. தேர்தல் அரசியலைத் தாண்டிய நட்பு. சாதியவாதம், வகுப்புவாதம் பெரும்பான்மைவாதம் எதேச்சதிகாரம் ஆகிய அனைத்திற்கும் எதிராக ஜனநாயக சக்திகள் ஒற்றுமையுடன் பணியாற்றுவது தான் தோழர் நல்லக்கண்ணுவிற்கு நாம் வழங்கும் நூற்றாண்டு பரிசாக அமையும். நூற்றாண்டு கண்ட நல்லகண்ணு பல்லாண்டு வாழ்க” எனப் பேசினார்.