உலகின் பல்வேறு நாடுகளிலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு பிறந்தது. அதே சமயம் இந்தியாவில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன.
இதன் ஒரு பகுதியாக முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள், விமான நிலையங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்றனர்.
பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில்,
'நாட்களால் தன்னைப்
புதுப்பித்துக் கொள்கிறது வாரம்
பருவங்களால் தன்னைப்
புதுப்பித்துக் கொள்கிறது காலம்
இலை தளிர் மலர்களால்
புதுப்பித்துக் கொள்கிறது காடு
சுழித்தோடும் ஓட்டத்தால்
புதுப்பித்துக் கொள்கிறது ஆறு
சுழன்றோடும் பாய்ச்சலால்
புதுப்பித்துக் கொள்கிறது காற்று
உயிர்த்தலில் இருத்தல்
புதுப்பித்தல்
இந்த புத்தாண்டில்
உங்களை எப்படிப் புதுப்பித்துக் கொள்ளப்போகிறீர்கள்?
அயர்ச்சி இல்லாத முயற்ச்சியால்
தளர்ச்சி இல்லாத உணர்ச்சியால்
நிச்சயிக்கப்பட்ட லட்சியத்தால் புதுப்பித்துக் கொண்டே இருங்கள்
ஒவ்வோராண்டும் புதிதாய் பிறப்பீர்கள்
வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார்.