விழுப்புரம் மாவட்டம் வி.அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சேட்டு என்கிற சேதுராமன். இவர் முன்பு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்ததால் அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். மக்களுக்கான பணிகளை உடனுக்குடன் செய்து கொடுத்து நல்ல பெயர் எடுத்தவர். அப்படியிருக்கும்போது அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (06.12.2021) பெட்ரோல் பங்க்கிற்குச் சென்ற ஊராட்சி மன்றத் தலைவர், தமது இருசக்கர வாகனத்திற்குப் பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார்.
அதேநேரம், டாஸ்மாக் கடைக்குச் சென்று குடிப்பதற்கு மது பாட்டில்கள் வாங்கி வந்துள்ளார். ஒரு இடத்தில் அமர்ந்து இரு பாட்டில்களையும் அருகருகே வைத்துவிட்டு முதலில் மது குடித்துள்ளார். போதை அதிகமானதும் மேலும் மேலும் குடிப்பதற்கு மது பாட்டிலை எடுப்பதற்குப் பதிலாக அருகிலிருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை எடுத்து மது என நினைத்து குடித்துள்ளார். இதனால் மயக்கம் அடைந்த அவரை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்துவிட்டு அவரை மீட்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சேதுராமன் உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மதுபோதையில் மதுவுக்குப் பதில் பெட்ரோலைக் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.