கடலூர் மாவட்டம் ஜவான் பவானி இணைப்பு சாலையில் போலீஸ்காரர் ஒருவர் நேற்று (04/02/2020) மதியம் நின்று கொண்டிருந்தார். பின்பு அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து பணம் வசூல் செய்துள்ளார்.
இதனிடையே பணத்தை பறிகொடுத்த பாதிக்கப்பட்ட சிலர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் உடனடியாக திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த போலீஸ்காரரிடம், 'நீங்கள் எந்த காவல் நிலையத்தில் பணி புரிகிறீர்கள்?' என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த போலீஸ்காரர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் இளவரசன் (30) என்பதும், போலீஸ் சீருடை அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்களில் வருபவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அதையடுத்து வழக்குப்பதிவு செய்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் இளவரசனை கைது செய்ததுடன், அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அதேசமயம் இளவரசன் இதுபோன்று வேறு எந்தெந்த பகுதியில் போலீஸ் சீருடையில் வசூல் செய்துள்ளார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.