சேலத்தில் மளிகை கடைக்குள் சுவரில் துளையிட்டு ரகசியமாக பதுக்கி வைத்திருந்த குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று (ஆகஸ்ட் 4, 2018) பறிமுதல் செய்தனர்.
சேலம் சூரமங்கலம் காவல் நிலையம் அருகில் உள்ள ஒரு மளிகை கடையில் குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அதிகாரிகள் நேற்று காலை சந்தேகத்திற்குரிய கடையில் சோதனை நடத்தினர். கடையின் மூலைமுடுக்கெல்லாம் தேடியும் போதைப்பொருள்களை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் சுவரில் துளையிட்டு ஒரு கதவு பொருத்தப்பட்டதற்கான அடையாளம் தெரிந்தது. சந்தேகத்தின்பேரில் அந்தக் கதவை திறந்து பார்த்தபோது, ஒரு ஆள் மட்டும் உள்ளே நுழையும் அளவுக்கு மர்ம அறை ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ரகசிய அறைக்குள் போதைப்பொருள்களை பதுக்கி வைத்திருந்தனர். அந்த அறைக்குள் இருந்து 80 கிலோ போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளர் ஜான்ஷா ராம் என்பவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.
ஆம்னி பஸ்சில் கடத்தல்:
இதற்கிடையே, பெங்களூரில் இருந்து கோவை செல்லும் இரண்டு தனியார் ஆம்னி பஸ்களில் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையில் போலீசார் கருப்பூர் செக்போஸ்ட் அருகே சந்தேகத்திற்குரிய இரண்டு ஆம்னி பஸ்களையும் தடுத்து சோதனை நடத்தினர்.
ஒரு பஸ்சில் இருந்து 6 மூட்டைகளும், மற்றொரு பஸ்சில் இருந்து 12 மூட்டை போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.2.50 லட்சம். பயணிகளை இறக்கிவிட்டு விட்டு, நாளை காலை சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி டிரைவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.