கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது மடப்பட்டு. இங்கு வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறும். இங்குள்ள சந்தையில் காய்கறிகள், ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த ஏழு மாதங்களாக கரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் வாரச்சந்தைகள் முடக்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த 2 வாரமாக பல்வேறு ஊர்களில் வாரச் சந்தைகள் படிப்படியாக மீண்டும் துவங்கி நடைபெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில், நேற்று மடப்பட்டு வாரச்சந்தைக்கு சென்னை, திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடு, மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். ஒரு ஜோடி மாடு ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்திற்கு மேல் விற்பனையாகியுள்ளது.
இதேபோன்று, பால் கறக்கும் பசுக்கள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை ஆகியுள்ளது. அதேபோன்று காய்கறிகள் கிராமங்களில் வளர்க்கப்பட்ட ஆடுகள், கோழிகள் ஏராளமாக விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் இங்கு ஒரு கோடி ரூபாய் வரை மாடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வாரச் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று இன்னும் பல்வேறு ஊர்களில் வாரச் சந்தைகள் முடக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பெண்ணாடம் காய்கறி சந்தை, ராமநத்தம் காய்கறி சந்தை, வேப்பூர் சந்தை உட்பட பல்வேறு ஊர்களில் வாரச் சந்தைகள் துவக்கப்பட வேண்டும் என்கிறார்கள் கிராமப்புற விவசாயிகள்.
விவசாயக் கூலிகள், கரோனா காலத்தில் வேலை வாய்ப்பு கிடைக்காமல், வருவாயின்றி குடும்பம் நடத்துவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை விற்பனைசெய்ய சந்தைகள்தான் பிரதான இடமாக இருந்துவந்தது. கரோனாவால் சந்தைகள் முடக்கப்பட்டிருந்ததால், கையில் பொருள் இருந்தும் அதை விற்க முடியாமல் அவதிப்பட்டுவந்தனர். தற்போது, சந்தைகள் துவங்கியுள்ளது. அவர்கள் முகத்திலும் வாழ்க்கையிலும் சந்தோஷம் களைகட்டியுள்ளது.
இதேபோல், தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் முடக்கப்பட்டுள்ள வாரச் சந்தைகளை மீண்டும் துவக்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்கிறார்கள் வியாபாரிகள்.