திருச்சியில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் அறிந்து சில நாட்களுக்கு முன்பு போலீசார் நடத்திய சோதனையில் திருச்சி கம்பரசம்பேட்டையை சேர்ந்த அப்துல்லா மகன் சீனிமுகமது, காட்டூர் ரெத்தினம் மகன் ராமலிங்கம் ஆகிய இருவரிடம் இருந்து 1280 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் நடந்த விசாரனையில் அவர்களிடம் மொத்தமாக குட்கா பொருள் வாங்கிய பில் கண்டெடுக்கப்பட்டது. அந்த பில் புதுக்கோட்டையில் வாங்கியதாக காட்டியது.
அந்த பில் பற்றிய விபரங்களை புதுக்கோட்டை எஸ்.பி.அருண்சக்திகுமாருக்கு திருச்சியில் சோதனை செய்த போலீசார் கொடுத்துள்ளனர். மேலும் புதுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் செவிலியரின் கணவர் தான் மொத்த வியாபாரி என்ற கூடுதல் தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மரக்கடை வீதி, தெட்சிணாமூர்த்தி மார்க்கெட், பிருந்தாவனம், அம்பாள் புரம், மேல 4-ம் வீதி, சண்முகா நகர் ஆகிய இடங்களில் குடோன், கடை மற்றும் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பில் மூட்டை, மூட்டையாக பதுக்கி இருந்த சுமார் 6,390 கிலோ எடையுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் சம்மந்தப்பட்ட புதுக்கோட்டை மேல 4-ம் வீதியைச் சேர்ந்த வி.சவுந்தரராஜன்(40), வடக்குராஜவீதியைச் சேர்ந்த வீரமணி(40), எழில் நகரைச் சேர்ந்த முகமதலி(60), கிழக்கு 5-ம் வீதியைச் சேர்ந்த நாராயணன்(43) ஆகிய 4 பேரை கைது செய்தனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் குட்காவின் மொத்த குடோன் இருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்துள்ளதாகவும், விரைவில் அவர்களும் பிடிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.