சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதைத் தவிர்ப்பதற்காகவும், ஆன்லைன் முறையைக் கடைப்பிடிக்கவும் பாஸ் டேக் முறையைக் கொண்டு வந்துள்ளனர். இந்த முறையே அனைத்து வாகனங்களுக்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசு பேருந்துகளுக்கும் இதே போல பாஸ் டேக் மூலம் டோல் கட்டணம் வசூல் செய்ய சுங்கச்சாவடிகளைக் கடக்கும் அனைத்து பேருந்துகளுக்கும் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து திருச்சி வழியாகக் கோயம்புத்தூர் செல்லும் டி.என். 68 என். 0653 என்ற பதிவு எண் உள்ள சூப்பர் டீலக்ஸ் பேருந்து இன்று (30.12.2024) மதியம் திருச்சிக்கு வந்து அங்கிருந்து கோயம்புத்தூர் புறப்பட்டுச் சென்றது. ஆனால் அந்த பேருந்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டில் பேருந்து பதிவு எண் டி.என். 68 என். 0056 என்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து கோவைக்குச் செல்லும் போது கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள சுங்கச்சாவடியில் நுழைந்த போது பாஸ்டேக்கில் பணம் இல்லை என்று அரசுப் பேருந்தை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யாததால் சுங்கச்சாவடியில் ஸ்கேன் ஆகவில்லை. அதனால் பயணிகளுடன் பேருந்து பின்னால் எடுத்து வந்து மாலை 03.45 முதல் 04.20 மணி வரை சுமார் 35 நிமிடங்கள் சுங்கச்சாவடியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் அவசரமாகச் செல்ல வேண்டிய பயணிகள் அவதிப்பட்டனர். இது குறித்து அந்த பேருந்தில் பயணம் செய்த புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் சமூக ஆர்வலர் மக்கள் பாதை ராசேந்திரன் சம்மந்தப்பட்ட கும்பகோணம் கோட்ட அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “அப்படியா என்னவென்று விசாரிக்கிறோம்" என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார்.
சுமார் 35 நிமிடங்களுக்குப் பிறகு நடத்துநர் சுங்கச்சாவடியில் ரொக்கமாக ரூ. 410 பணம் செலுத்திய பிறகு அரசுப் பேருந்து அங்கிருந்து கோவை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு அரசுப் பேருந்து பாஸ் டேக்கில் பணம் இல்லாமல் 35 நிமிடம் டோல்கேட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகம் இது போலத் தொலை தூரம் செல்லும் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் பணம் உள்ளதா என்பதை ஆய்வு செய்யாமல் அலட்சியமாக இருப்பதால் பயணிகள் நடுவழியில் தவிக்க வேண்டியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட பயணி மக்கள் பாதை ராசேந்திரன் நுகர்வோர் நீதிமன்றம் செல்லவும் தயாராகி உள்ளார். மேலும் டிக்கெட் மெசின் வேறு பேருந்துக்கு மாற்றிக் கொடுக்கும் போது அந்த பேருந்து பதிவு எண்ணையும் மாற்றாமல் கொடுப்பதால் பயணம் செய்யும் பேருந்து எண் வேறு, பயணச் சீட்டில் உள்ள பேருந்து பதிவு எண் வேறாக இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் எப்படி வழக்குப் பதிவு செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.