தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 78வது நினைவு தினம் இன்று (30.01.2025) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமைச் செயலக ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக காவலர்களின் அணிவகுப்பு மரியாதை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். காந்தியடிகளின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள பதிவில், “காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956ஆம் ஆண்டு கே. காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச்சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை - அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?.
தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன. காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.