
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளிமாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்த மசோதா மீது முடிவெடுக்க மூன்று முதல் நான்கு வாரங்கள் தேவை என ஆளுநர் தெரிவித்திருக்கும் நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் ஒரு சட்டத்தை உருவாக்க சொல்லி அதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரை பார்த்து அழுத்தம் கொடுத்தோம். ஆனால் சட்ட விதிப்படி நீங்கள் கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என கட்டாயப்படுத்த முடியுமா... முடியாது. இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதாவை கொண்டுவந்த பெருமை அதிமுகவிற்கும் முதல்வருக்கும் போகக்கூடாது என திமுக நடத்துகின்ற கபட நாடகம் தான் இந்த போராட்டம் என்பது எங்கள் நிலை" என்றார்.