ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இரண்டாம் முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்பொழுது மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் 131 நாட்களுக்கு பின் கடந்த மார்ச் 6 ஆம் தேதி தமிழக அரசுக்கு மீண்டும் ஆளுநர் அனுப்பி வைத்திருந்தார். அதில், 'பந்தயம், சூதாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் மீது மட்டுமே மாநில அரசுகளால் சட்டம் இயற்ற முடியும். திறன்களை வளர்க்கக்கூடிய சில விஷயங்கள் இருக்கிறது எனவே ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய முடியாது. இதுபோன்ற சட்டத்தை இயற்றும் அதிகாரம் மாநில சட்டப் பேரவைக்கு இல்லை. திறன் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகள் மத்திய அரசின் பட்டியலில் இருப்பதாக சட்ட ஆணையம் தெரிவித்திருக்கிறது. பெட்டிங் உள்ளிட்ட அதிர்ஷ்டத்தால் வெல்லக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே மாநில பட்டியலில் 34வது பிரிவில் இருக்கிறது.’ என ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் இந்த தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு மார்ச் 24 ஆம் தேதி முறைப்படி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. மறுபுறம் தமிழக ஆளுநரின் சர்ச்சை பேச்சுகளுக்கும் பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இரண்டாம் முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாப்படி 'ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்படும். ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.