திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, கொச்சி, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், அங்கிருந்து திருச்சிக்கும் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக திருச்சி விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். தமிழகத்தின் மையப்பகுதி என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் திருச்சி விமானநிலையத்திற்கு வந்து கொண்டே இருப்பதால் எப்போதும் பயணிகளுடன் நிரம்பி வழியும்.
இப்படி பயணிகள் அதிகம் பேர் வருவதை சாதகமாக பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகள் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து வாடிக்கையாகி விட்டது. முன்பு பயணிகள் தங்கம் கடத்தியது தற்போது அதிகாரிகள் துணையோடு கடத்துவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதிலும் குறிப்பாக கடந்த 2 மாதங்களாக தினமும் பயணிகள் சிலரிடம் பல கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுவதும் இதற்கு விமானநிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களே துணையாக இருப்பதும் தெரிய வந்தாலும் குறிப்பாக அதிகாரிகளை கண்டுபிடிக்க முடியாமலே இருந்தது.
மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியும் கூட பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர் சம்பவமாக இருந்தது. இந்த நிலையில் போதை பொருட்கள், நட்சத்திர ஆமைகள் போன்றவற்றை கடத்தி வந்த பயணிகளும் சிக்கியுள்ளனர். தொடர்ச்சியான கடத்தல் சம்பவங்கள் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் தான் இந்த நிலையில் தான் அந்த தகவல் அதிகாரிகளை சுறுசுறுப்படைந்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் மலிங்டோ விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
விமானம் வந்தது இறங்கியதும் அங்கே சென்ற வருவாய் பிரிவு அதிகாரிகள் யாரையும் வெளியே அனுப்பாமல் அப்படி செக் பண்ண ஆரம்பித்தார்கள். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது அங்கிருந்த விமான பணிப்பெண்கள் 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறியதால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் விமானத்தின் ஒரு பகுதியில் 6½ கிலோ தங்க நகைகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அப்போது குறிப்பிட்ட பயணிகளிடம் பைகளை நேரடியாக பெற்று கையில் வைத்திருந்த ஒப்பந்த ஊழியர்கள் 5 பேரையும், அதனை அவர்களிடம் கொடுத்த பயணிகளையும் அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர். அவர்கள் 8 பேரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி அழைத்து சென்றனர்.
ஒப்பந்த ஊழியர்கள் வைத்திருந்த பைகளில் தங்க நகைகள், தங்க கட்டிகள், வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. இதைத்தொடர்ந்து அதிலிருந்த தங்கத்தை எடையிட்டு அளந்தனர். இதில் 6½ கிலோ வரை இருந்தது தெரிந்தது. அதன் மதிப்பு ரூ.2½ கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் வெளிநாட்டு கரன்சிகள் பணம் ரூ.10 லட்சத்து 93 ஆயிரம் வரை இருந்தது. இதையடுத்து கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை மத்திய வருவாய் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ஒப்பந்த ஊழியர்கள் 5 பேரையும், 3 பயணிகளையும் பிடித்து விசாரித்தனர்.
விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை ஒப்பந்த ஊழியர்களிடம் கொடுத்து விட்டு வெளியில் வந்து அந்த பயணிகள் பெற இருந்ததும், ஒப்பந்த ஊழியர்களும் சுங்கத்துறை சோதனையில் சிக்காத வகையில் அதனை நைசாக எடுத்து வெளியில் வந்து பயணிகளிடம் ஒப்படைக்க இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 8 பேரையும் விமானநிலையத்தில் ஒரு அறையில் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் வெளியில் கொண்டு சென்று கொடுத்தால் ஒப்பந்த ஊழியர்களுக்கு லஞ்சமாக ஆயிரக்கணக்கில் கைமாறுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து முதல் கட்ட விசாரணையில் 3 ஒப்பந்த ஊழியர்களை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து திருச்சி JM - 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முகமது சரிப் , திருகோகர்ணம், புதுக்கோட்டை மாவட்டம், பிரதீப் சவுரிராஜ் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், மகிமை பிரபு , பெரியகுளம், தேனி மாவட்டம். மேலும் 3 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. 3 பேரையும் வருகிற 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கவுதமன் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காரில் அழைத்து சென்றனர்.
கடத்தலுக்கு பணிப்பெண்களும், ஒப்பந்த ஊழியர்களும் துணையாக இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.