பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான ஜனவரி 16- ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஜனவரி 16- ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி உரையை காண்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என கூறவில்லை. மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே டி.வி.யில் பார்த்துக்கொள்ளலாம். மாணவர்கள் பயப்படாமல் பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக ஜனவரி 16- ஆம் தேதி பிரதமர் டெல்லியில் உரையாற்றுகிறார். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பிரதமரின் உரையை கேட்க 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வர வேண்டுமென சுற்றறிக்கை வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்திருக்கிறார்.