தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்க வேண்டியதில்லை என்றும் ஏற்கனவே வெளியிட்ட அரசாணையே போதுமானது என விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுகோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழக அரசின் அரசாணை மிக தெளிவாக இருக்கிறது. தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்க வேண்டியதில்லை. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோதுதான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்கு அனுமதி வழங்கப்பட்டு, 247 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆலைக்கு தேவையான தண்ணீர் வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ள நிலை அங்குள்ள மக்களுக்கு தெரியும். இதனை மீறி ஆலை திறக்க வாய்ப்பே இல்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்படி சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தாரோ, அதேபோன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரும் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.