ஆண்களுக்கு நிகராக பெண்களும் இப்போது இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்கிறார்கள். அப்படி பயணம் செய்யும் பெண்களை ஒரு கும்பல் கண்காணித்துக் கொண்டு பின் தொடர்வதும் ஆங்காங்கே பல ஊர்களில் நடக்கிறது. குறிப்பாக செயின் பறிப்பு திருடர்கள் கிராமப் பகுதிகளை கூட விட்டு வைப்பதில்லை. கூடுதலாக கிராமப் பகுதியை தான் அவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மேவானி பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி 45 வயதான அவர் கடந்த ஒரு வருடமாக ஸ்கூட்டி ஒட்டி வருகிறார். சாவித்திரி தனது கிராமமான மேவானியிலிருந்து கோபிசெட்டிபாளையத்திற்கு சுமார் 15 கிலோ மீட்டர் தனது மொபட்டிலேயே நேற்று சென்றார். கோபியில் வேலை முடிந்ததும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது சாவித்திரிக்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அந்த இடம் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத வயல் பகுதி மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து வந்த நபர் திடீரென சாவித்திரி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சாவித்திரி திருடன்... திருடன் என கத்திக் கொண்டே நிலை தடுமாறி வண்டியை நிறுத்தினார் ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சாவித்திரி கோபி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் .அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பு திருடர்களை தேடி வருகின்றனர்.
இரு சக்கர வாகனமான ஸ்கூட்டியில் பயணம் செய்யும் பெண்களை நோட்டமிடும் திருட்டு கும்பல் தனியாக வரும் பெண்களையே குறிவைக்கிறார்கள் கிராமப் பகுதி, காட்டுப் பகுதி, ஆள் நடமாட்டமில்லாத இடங்களை தேர்வு செய்து வைத்துக் கொண்டு பெண்களின் தாலிக்கொடி மற்றும் செயினை பறித்துக் கொண்டு வேகமாக பறந்து விடுகிறார்கள் இதில் அந்த திருட்டு கும்பல் பெரும்பாலும் ஹெல்மொட் போட்டு வருவதால் அடையாளம் தெரிவதில்லை. ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கோவை என மேற்கு மண்டலத்தில் மட்டும் கடந்த மூன்று மாதத்தில் நூறு பெண்களிடம் செயின் அறுத்துள்ளார்கள் திருடர்கள் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.
ஸ்கூட்டி ஒட்டும் பெண்களே உஷார்...