
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாகச் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அதேபோல் அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடைபெற்றது. இதையடுத்து இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இதனையடுத்து அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 20ஆம் தேதி (20.03.2025) நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது‘எதற்காக டாஸ்மாக் அலுவலகத்திற்கு வந்தீர்கள் என தெரிவித்திருக்க வேண்டும். இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது’ என அமலாக்கத்துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ‘நள்ளிரவில் சோதனை நடத்தப்படவில்லை. மாலை வரை சோதனை நடத்தப்பட்டது. சில நேரங்களில் சிறிது தாமதம் ஆகி இருந்திருக்கலாம். ஆனால் நள்ளிரவு வரை சோதனை நடத்தப்படவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்கள்’ என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், “பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகி இருக்கிறது. அமலாக்கத்துறையினர் அதிகாரத்தைச் செயல்படுத்திய விதத்தை தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம். இது சம்பந்தமாக அமலாக்கத்துறை மார்ச் 25ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை இதில் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கு இன்று (25.03.2025) மீண்டும் விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விலகினர்.
இத்தகைய பரபரப்பான சூழலில் தான் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் இன்று பிரமான பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “அமலாக்கத்துறையின் சோதனையின் போது ஊழியர்கள், அரசு அதிகாரிகள் நடத்தப்பட்ட விதம் சட்டவிரோதமானது ஆகும். மேலும் இது மனிதத் தன்மையற்ற செயல் ஆகும். உடல் ரீதியாகவும் மட்டுமின்றி மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். காலையில் பணிக்கும் வந்தவர்கள் நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அதே சமயம் மறுநாள் காலையில் விரைவாக பணிக்கு வரவும் அறிவுறுத்தப்பட்டனர்.

இதன் காரணமாக 3 நாட்கள் தூக்கம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து அமலாக்கத்துறை எவ்வித கவலையும் இன்றி நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். சோதனையின் போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டன. குடும்பத்தினருக்குக் கூட உரியத் தகவல் தெரிவிக்க இயலவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சோதனை நடைபெற்ற 3 நாட்களில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.