பெண் குழந்தைகள் தாக்கப்படும் காணொளி குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
இரு பெண் குழந்தைகளை வாலிபர் ஒருவர் தாக்கும் கானொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் மதுபோதையில் பெண் குழந்தைகளைத் தந்தை கொடூரமாக தாக்குவதாக கூறி தமிழ்நாடு காவல்துறையைக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்தக் காணொளி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்தக் காணொளியைக் குறிப்பிட்டு தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இது தவறான தகவல். இது தமிழ்நாடே அல்ல. இந்தச் சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்தது. குழந்தைகளைத் தாக்கிய தந்தையின்மீது அம்மாநில காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் குழந்தைகளை மீட்டு தாயிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். எனவே வதந்திகளை நம்பாதீர் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.