சர்வதேச அளவில் கச்சா பொருட்களின் விலை ஏற்றத்தை வைத்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள். அந்த வகையில் பெட்ரோல் - டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 91 ரூபாய். இந்த மாதத்தின் இறுதிக்குள் இது 100 ரூபாயை எட்டிவிடும் என்கிறார்கள் பங்க் உரிமையாளர்கள். பெட்ரோல் - டீசல் விலை இப்படி கட்டுக்கடுங்காமல் உயர்ந்து வருவதால் அத்யாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
முந்தைய மாதத்திற்கும் நடப்பு மாதத்திற்கும் கணக்கிட்டால் ஒவ்வொரு பொருளின் விலையும் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்படி விண்ணை முட்டும் அளவுக்குப் பெட்ரோல் - டீசல் விலையும், விலைவாசியும் உயர்ந்துள்ள நிலையில், தற்போது மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் 50 ரூபாயை உயர்த்தியிருக்கின்றன பெட்ரோலிய நிறுவனங்கள். இந்த விலை உயர்வு இன்று (16.02.2021) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக உயர்கிறது.
இந்த மாதம் பிப்ரவரி 4-ம் தேதி சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக 50 ரூபாய் உயர்த்தியுள்ளனர். ஒரே மாதத்தில் சிலிண்டர் விலை 75 ரூபாய் அதிகரித்திருப்பதில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் நொந்து போயிருக்கிறார்கள். அண்மைக்காலமாக, சர்வதேச அளவில் கச்சா பொருட்களின் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்குப் பதிலாக, அதனை உயர்த்தி வருவது இல்லத்தரசிகளிடம் கோபத்தையும் வருத்தத்தையும் வரவழைத்துள்ளது.