வேலூர் மாவட்டம், காட்பாடி கழிஞ்சூர் பன்னீர்செல்வம் தெருவில், சி.பி.ஐ அதிகாரிகளை போல் நடித்து பலரை ஏமாற்றி வரும் கும்பல் தங்கியுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில், லத்தேரி காவல்நிலைய ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டது. அங்கிருந்த 36 வயதுடைய ஹரி என்பவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஹரி சி.பி.ஐ அதிகாரி என்ற போலி அடையாள அட்டை வைத்திருந்ததாக கூறுகின்றனர். மேலும் ஹரியிடமிருந்த ரூபாய் 4.70 லட்சம் ரொக்கம் இருந்ததையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சி.பி.ஐ அதிகாரிகள் என தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல இடங்களில் மிரட்டி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் தலைவன் ஹரிதான் என்கின்றனர். அவன் சிக்கியுள்ளதால் இந்த கும்பலில் யார், யார் எல்லாம் உள்ளார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும், அவர்களும் சிக்குவார்கள், முழுமையான விசாரணைக்கு பிறகே எவ்வளவு கொள்ளையடித்துள்ளார்கள் என்பது தெரியவரும்.
கைது செய்யப்பட்ட ஹரியை காட்பாடி காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர் போலீஸார்.