Skip to main content

கஜா புயல் நிவாரணம் ரூ.1,146 கோடி போதாது: முழுத்தொகையை வழங்க வேண்டும்: அன்புமணி

Published on 01/01/2019 | Edited on 01/01/2019
anbumani ramadoss



 

கஜா புயவ்ல நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.1,146 கோடி போதுமானதல்ல, தமிழக அரசு கோரியதைப்போன்று ரூ.15,000 கோடி முழுத்தொகையை வழங்க வேண்டும் என்று பாமக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக  மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.1,146 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது, இது யானைப்பசிக்கு சோளப்பொரி போடுவதைப் போல உள்ளது.


 

 தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களை கடந்த நவம்பர் 16&ஆம் தேதி தாக்கிய கஜா புயலால் வரலாறு காணாத அளவுக்கு சேதம் ஏற்பட்டது. லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் சாய்ந்தன. விளைந்த நிலையில் இருந்த பயிர்கள் அழிந்து விட்டன. வீடுகளில் கூறைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. கஜா புயலால் ஒட்டுமொத்தமாக ரூ.25,000 கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு மிகவும் குறைவாக ரூ.15,000 கோடி மட்டும் தான் இழப்பீடு கோரியது. ஆனால், அதைக்கூட முழுமையாக வழங்காமல் ரூ.1,146 மட்டும் வழங்கியது போதுமானதல்ல. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

கஜா புயல் பாதிப்புக்காக மத்திய அரசு வழங்கியுள்ள நிதி, தமிழக அரசு கோரிய நிதியில் வெறும்  7.64 விழுக்காடு மட்டும் தான். இயற்கைச் சீற்றங்களால் தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம் மத்திய அரசு வழங்கும் நிவாரண உதவி என்பது மிகக்குறைவாகவே உள்ளது. 2015-ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு ரூ.13,731 கோடி நிதி கோரியது. ஆனால், மத்திய அரசு வெறும் ரூ.1940 கோடி மட்டுமே வழங்கியது. இது  கேட்டதில் 15% மட்டும் தான். 2016-&-ஆம் ஆண்டில் தமிழகத்தை தாக்கிய வர்தா புயலுக்காக தமிழக அரசு  ரூ.22,573 கோடி கோரியது. ஆனால், கிடைத்தது ரூ.266.17 கோடி மட்டும் தான். இது கிட்டத்தட்ட ஒரு விழுக்காடு மட்டுமே. 2017-ஆம் ஆண்டு வறட்சிக்காக தமிழக அரசு கோரியது ரூ.39,565 கோடி. ஆனால், கிடைத்தது ரூ.1748 கோடி தான். இது தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 4% மட்டும் தான். 2017&-ஆம் ஆண்டில் ஒக்கி புயல் பாதிப்புகளுக்காக தமிழக அரசு கோரியது ரூ.9300 கோடி. ஆனால் கிடைத்தது ரூ.133 கோடி மட்டும் தான். இது 1.5% நிவாரண உதவி மட்டுமே.
 

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்தியக் குழுவினர், கஜா புயலால் தமிழகம் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பதாக தெரிவித்தனர். அவ்வாறு இருக்கும் போது அவர்கள் தமிழகத்திற்கு எவ்வளவு நிதி வழங்க வேண்டுமென பரிந்துரைத்தனர்? அவர்கள் பரிந்துரை செய்த தொகையில் எத்தனை விழுக்காட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது? என்பது தெரியவில்லை.


 

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் அதிகம். பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த அளவு நிதி வழங்குவதர்கு இந்தத் தொகை போதுமானதல்ல, எனவே, மத்திய அரசு, தமிழக அரசு கோரியதைப் போன்று ரூ.15,000 கோடி நிதி வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 


 


 

சார்ந்த செய்திகள்