நெடுவாசல் கிராமத்தில் தென்னை, சவுக்கு, பலா தோப்பில் மரங்கள் அதிகமாக சாய்ந்து சேதம் ஏற்பட்ட விரக்தியில் இன்று(நவம்பர்27) விவசாயி திருச்செல்வம் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று மெய்யநாதன் எம்.எல்.ஏ கோரிக்கை வைத்துள்ளார்.
கஜா புயல் தாக்கியதில் சோலைவனமாக இருந்த நெடுவாசலும் தப்பவில்லை. போராட்டம் நடந்த நாடியம்மன் கோயில் திடலில் நின்ற அத்தனை ஆலமரங்களும் ஒடிந்து சாய்ந்தது. அதே போல சாலை சாலை எங்கும் நிழல் கொடுத்த மரங்களையும் காணவில்லை. சுற்றியுள்ள விவசாய நிலங்களில் தென்னை, வாழை, மா, பலா, சவுக்கு என்று அத்தனை மரங்களும் ஒடிந்து சாய்ந்தது. இதனால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் வேலாயுதம் மகன் திருச்செல்வம் ( 45) விவசாயி. அவருக்கு மனைவியும், 3 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். திருச்செல்வத்தின் சுமார் 25 ஏக்கரில் நின்ற தென்னை, பலா, சவுக்கு, பாக்கு மரங்கள் மற்றும் பல மரங்களம் அடியோடு ஒடிந்து நாசமானது.
விஷம் குடித்தார்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தோட்டத்தில் சாய்ந்து கிடந்த மரங்களை போய் பார்த்துக் கொண்டிருந்தவர் சோகத்தில் காணப்பட்டார். இந்த நிலையில் மனமுடைந்த திருச்செல்வம் ஞாயிற்றுக் கிழமை இரவு பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து பட்டுக்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ரூ. 20 லட்சம் இழப்பீடு :
இந்த தகவல் அறிந்து நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் நெடுவாசலில் திருச்செல்வம் வீட்டில் திரண்டனர். மேலும் ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் அஞ்சலி செலுத்திய பிறகு.. திருச்செல்வத்தின் அனைத்து மரங்களும், பயிர்களும் நாசமான நிலையில் தமிழக அரசு அறிவித்த நிவாரணம் விவசாயிகளின் கடனைக் கட்டக் கூட பத்தாத நிலையில் உள்ளதால் திருச்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதனால் தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.
இந்த நிலையில் திருச்செல்வம் உடல் பிரேதப்பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து வடகாடு போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். தோட்டத்தில் உள்ள மரங்கள் சாய்ந்துவிட்டதைப் பார்த்து மனம் உடைந்து இருந்த திருச்செல்வத்தை தேற்றி வீட்டுக்கு அனுப்பினேன். மரங்கள் உடைந்தாலும் மண் இருக்கிறது. அந்த மண்ணில் மரங்களை உருவாக்குவோம் என்று நம்பிக்கையாக பேசி வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று தெரியாமல் போனது என்று அவரது அப்பா வேலாயுதம் கூறினார்.