வடகாடு மற்றும் மாங்காடு பகுதியில் புயல் பாதித்துள்ள பகுதிகளை மத்திய ஆய்வுக்குழுவினர் இரவில் ஆய்வு செய்ததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆலங்குடி தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டு தென்னை, பலா, தேக்கு, சந்தனம் மற்றும் பல வகையான மரங்களும் வாழை தோட்டங்களும் சேதமடைந்தது. மேலும் பல ஆயிரம் வீடுகளும் சேதமடைந்து பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பள்ளி போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இந்த பாதிப்புகளை பார்வையிட மத்திய ஆய்வுக்குழுவினர் சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை வந்தனர்.
இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு, நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்துறை இயக்குநர் பி.கே.ஸ்ரீவத்சவா, ஊரக வளர்ச்சித்துறை துணைச் செயலாளர் மாணிக் சந்திரா பண்டிட், மின்துறை தலைமைப் பொறியாளர் வந்தனா சிங்கல், நீர்வளத்துறை இயக்குநர் ஜெ.ஹர்ஷா, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் இளவரசன் ஆகிய ஏழு பேர்கள் கொண்ட ஆய்வுக்குழுவினர் வந்திருந்தனர். இவர்களுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கண்காணிப்பு அலுவலர்கள் சுனில் பாலிவால், சம்பு கல்லோலிகர், மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோரும் ஆய்வுக்குழுவினருடன் சென்று பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
கீரனூர் பகுதியில் மாலையில் ஆய்வு செய்த மத்திய ஆய்வுக்குழுவினர் இரவு 7.30 மணிக்கு பிறகு வடகாடு வடக்குப்பட்டி, கல்லிக்கொல்லை ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். அப்போது ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் பாதிப்புகள் குறித்து விளக்கியதுடன் ஆலங்குடி தொகுதியில் அதிகமான பாதிப்புகள் உள்ளதால் ரூ. ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டும் என்று மனு கொடுத்தார். தொடர்ந்து மாங்காடு சில பகுதியில் ஆய்வு செய்தனர்.
மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் மத்திய குழுவினர் இரவில் ஆய்வு செய்வது என்பது எப்படி சாத்தியமாகும். பாதிப்புகள் எப்படி இரவில் தெரியும். தரைமட்டமாக உடைந்து கிடக்கும் மரங்களை விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் எப்படி கணக்கிட முடியும் என்று அதிருப்தி தெரிவித்தனர்.