
கரோனா தொற்று பரவி வரும் நிலையில், தொற்று பாதித்தவர்களுக்குச் சி்கிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் உள்ள காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் செல்வக்குமாரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் அவர்களுடைய பணிக்கு ஏற்றாற்போல் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பணியாற்றும் அனைவரின் பாதுகாப்புக்காக, அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள 14 நாட்கள் வழங்கப்படுகிறது. மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளின்படி கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்படுகிறது.
மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக பி.பி.ஈ. கிட், கையுறைகள், முகக்கவசம் வாங்குவதில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. தற்போது போதுமான உபகரணங்கள் இருப்பு உள்ளன. தமிழக அரசின் இந்தச் செயல்பாடுகளையும் மீறி கரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களுக்குத் தொற்று ஏற்பட்டது எதிர்பாராதது. இதை வைத்து மருத்துவ நிர்வாகம் இரக்கமற்ற முறையில் செயல்பட்டதாகக் கருத முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
‘தமிழக அரசின் இந்த அறிக்கை முழுமையாக இல்லை. ஆகவே, முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்..’ எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மே 18- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.