சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் 150வது பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரத்தில் இருக்கும் வ.உ.சி. இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு, குறிப்பாக தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநரான தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஓட்டப்பிடாரம் வந்த தொகுதியின் எம்.பி.யான கனிமொழி, வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியைத் திறந்துவைத்தவர், அதனைப் பார்வையிட்டார்.
அதன் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “வ.உ.சி.யின் 100வது பிறந்தநாள் விழா திமுக தலைவர் கலைஞரின் தலைமையில் கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அழைத்து வந்து வ.உ.சி.யின் உருவச் சிலையைத் திறந்துவைத்து பெருமை சேர்த்தவர் கலைஞர். அவரது வழியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், வ.உ.சி.யின் 150வது பிறந்தநாளை மிகச் சிறப்பாகவும், மக்கள் பாராட்டும்படியாகவும் தூத்துக்குடி மெயின் சாலைக்கு அவர் பெயரையும் வைத்துள்ளார்.
வருகின்ற தலைமுறைக்கும் அவரது பெயரைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை டிஜிட்டல் முறையில் அமைப்பது; அவரது புத்தகங்களை தமிழ்நாடு பாடப்புத்தகக் கழக வெளியீட்டு நிறுவனம் மூலம் வெளியிடுவது; வ.உ.சி. பெயரில் ஆய்வு இருக்கை மட்டுமல்லாது உருவச் சிலை, அவரது நினைவுநாளை தியாக திருநாளாகவும் அனுஷ்டிக்கப்படும்; அவரும், மகாகவி பாரதியாரும் படித்த பள்ளியையும் சீரமைக்கும் வகையில் ஒரு கோடிக்கும் மேலாக நிதி ஒதுக்கப்பட்டு, அங்கே புதிய பள்ளிக் கட்டடம் அமைக்கப்படும் என்பன போன்ற பதினான்கு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். தேசத்தின் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாமல் தமிழ் மொழிக்காகவும் தமிழின் அடையாளத்திற்காகவும் சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தொழிலாளர்களுக்காகத் தொடர்ந்து போராடிய வ.உ.சி.யின் நினைவுகளை நாம் போற்ற வேண்டும்” என்றார்.