சென்னை அடுத்துள்ள ஈசிஆர் சாலையில் உள்ள திருவிடந்தை கடற்கரையில், கடந்த ஏப்ரல் 11 முதல் வரும் 14 ம் தேதி வரை மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில், பத்தாவது ராணுவக் கண்காட்சி DEFEXPO - 18 என்ற பெயரில் நடந்துவருகிறது, முதன்முறையாக முப்படையும் ஒன்றிணைந்து கண்காட்சி நடத்துவது இதுதான் முதல் முறை. இந்த ராணுவக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து கண்காட்சியைப் பார்வையிடவிருக்கிறார்.
இந்த கண்காட்சியில் 47 நாடுகள் கலந்துகொள்கின்றன. மொத்தம் 670 அரங்குகள் இதில் உலக நாடுகளில் உள்ள 154 நிறுவனங்களும் இங்கு அரங்குகள் அமைத்துள்ளன. டாடா, எல் அண்ட் டி, கல்யாணி, மஹிந்திரா, எம்.கே.யூ, டி.ஆர்.டி.ஓ, எச்.ஏ.எல்., பி.இ.எல்., பி.டி.எல்., பி.இ.எம்.எல்., எம்.டி.எல்., ஜி.ஆர்.எஸ்.இ. மிதானி போன்ற ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் பெருநிறுவனங்களும், சிறு, குறு நிறுவனங்களும் (MSME - சிறு மற்றும் குறு நிறுவன வளர்ச்சித் துறை) இந்தியாவிலிருந்து கலந்துகொண்டுள்ளது.
அதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களான லாக்ஹீட் மார்ட்டின், போயிங், சுவீடனைச் சேர்ந்த சாப், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ், ரஃபீல், ரஷ்யாவைச் சேர்ந்த ரோசோன்போரோன் எக்ஸ்போர்ட்ஸ், யுனைடெட் ஷிப்பில்டிங், இங்கிலாந்தைச் சேர்ந்த பி.ஏ.ஈ சிஸ்டம்ஸ், இஸ்ரேலைச் சேர்ந்த சிபாட், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ரோடு அண்ட் ஸ்வார்ஸ் போன்ற உலகின் தலைசிறந்த ராணுவத் தளவாட நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்றுள்ளது, அதே போல அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஆஃப்கானிஸ்தான், செக் குடியரசு, பின்லாந்து, மடகாஸ்கர், மியான்மர், நேபாளம், போர்ச்சுக்கல், ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ஷேய்ச்சல்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளார்கள்.
கண்காட்சியின் கடைசி நாளான 14ம் தேதி மட்டுமே கண்காட்சியில் நடக்கும் முப்படை சாகசநிகழ்ச்சியை மட்டும் சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அரசு அங்கிகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்து உள்ளே செல்லலாம்..! ராணுவ கண்காட்சியையும், உள்நாட்டு, வெளிநாட்டு ராணுவதடவாள கண்காட்சியை அரங்கின் உள்ளே சென்று பார்க்க ஆன்லைன் ரிஜிஸ்ட்டர் செய்து அனுமதி சீட்டை பெற்று உள்ளே சென்ற பார்க்கலாம் இதற்கான கட்டணம் ரூ.100 பதிவுகட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.