தமிழ்நாட்டில் ஏற்படும் மின்வெட்டு தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ''கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை'' என தெரிவித்திருந்தார். அதேபோல் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது படுவதால் அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் மின் கம்பிகளில் ஏறி 2 மின் கம்பிகளும் உரசிக்கொள்வதால் மின்தடை ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.
மின்தடை குறித்த அமைச்சரின் கருத்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது செல்லூர் ராஜு, வைகை ஆற்றின் நீர் ஆவியாவதைத் தடுப்பதற்காக தெர்மோகோல் மூலம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இதேபோல் விமர்சிக்கப்பட்டிருந்தார். இதனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் சேர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியும் விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். ''அணிலால் மின்தடை ஏற்படுவதாக கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும். செந்தில்பாலாஜி கண்டுபிடிப்பால் நல்லவேளை நான் தப்பித்துவிட்டேன். எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின்கம்பிகளில் சென்றுகொண்டிருக்கின்றன'' என தெரிவித்துள்ளார்.